சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ கோவிலும், ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரும் திருவாரூர் சிறப்பு அம்சங்களாகும். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த பகுதியில் நெல், பருத்தி, பயறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் பிறந்த பகுதியாகும். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது.
திமுக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. கால்நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக திகழும் திருவாரூர் சட்டமன்றதொகுதி வரலாற்றில் ஒருமுறை கூட அதிமுக வெற்றி பெற்றது கிடையாது. தற்போது எம்எல்ஏ திமுகவின் பூண்டி கலைவாணன். திருவாரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,81,534 ஆகும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விளைநிலங்களை பாதிக்கும் தொழில்கள் கால்பதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். தியாகராஜர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும், அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும், மின் தகன மேடை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் மக்கள் முன்வைக்கின்றனர். திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினருக்கு மக்களிடம் பரவலாக ஆதரவான கருத்துகளே நிலவுகிறது.
ஆட்சியில் இல்லாவிட்டாலும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொகுதிக்காக சட்டப்பேரவையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் தனி மாவட்டமாக தரம் உயர்த்தியதும் மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததும் கலைஞர்தான். திருவாரூரில் புகழ்பெற்ற ஓடாத ஆழித்தேரை ஓட வைத்ததும், தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததும் கலைஞர் தான் என மக்கள் கூறுகின்றனர்.