திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நேற்று மதியம் 1 மணியிலிருந்து வருகிற 20-ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு 4:00 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இதையடுத்து மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். பின்னர் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியிலிருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன் பின்னர் 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபமும், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் கார்த்திகை மாதத்திற்கான பௌர்ணமி இன்று 1:03 தொடங்கி நாளை 2;51 நிறைவு பெறுகிறது. அதனால் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.