திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீப விழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து 7-ம் தேதி பௌர்ணமி ஆகும். 2 சிறப்பு தினங்களும் அடுத்தடுத்து வருவதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் 6-ம் தேதி காலை 6 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம் இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோயம்பேடு, தாம்பரம், சென்னை, வேலூர், புதுச்சேரி, திருப்பத்தூர், செஞ்சி, ஆரணி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். டிசம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.