திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ்த் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பேருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த மலை பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதினால் வனத்திற்குள் இருந்து கரடி, யானை, சிறுத்தை, பாம்பு, மான் போன்ற விலங்குகள் அவ்வபோது சாலைக்கு வருகிறது.
அவற்றை கண்டு வாகன ஓட்டிகளும் பக்தர்களும் அலறியடித்து ஓடும் சம்பவங்கள் வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை திருமலை திருப்பதி மலைப் பாதையின் ஏழாவது கிலோமீட்டர் தொலைவில் 10 க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம்மும் இரண்டு குட்டிகளும் கடந்து வனப்பகுதியில் இருந்து மலைப் பாதைக்கு வந்திருக்கின்றன. அங்கு ஆஞ்சநேயர் கோயில் அருகே ஒன்று கூடிய யானைகள் கூட்டம் பிளிறியபடி ஆக்ரோசத்துடன் மரக்கிளைகளை தும்பிக்கையால் ஒடித்து வீசி எறிந்தபடி இருந்திருக்கின்றது. இதனை தொடர்ந்து சாலையை வழிமறித்து அவை கும்பலாக நின்று கொண்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அங்காங்கே நிறுத்திவிட்டு அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வேட்டுவைத்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகளின் ரோட் சோ காரணமாக திருமலை திருப்பதி மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.