சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவர் தனது சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஆறுமுகத்தை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஆறுமுகத்தின் உடலை மீட்டனர். பின்னர் ஆறுமுகத்தின் உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.