கள்ளக்குறிச்சி அருகே திருமணமான நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(25) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த நித்யா(21) என்பவரை சென்ற 4 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நித்யா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கணவர் வீட்டிற்கு வந்திருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் மாமனார் மற்றும் மாமியார் வயலுக்கு சென்று விட்டார்கள். பின் மதியம் 02.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது நித்யா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்து நித்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறிக்கதறி அழுதார்கள்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நித்யாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.