விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நந்தினியை கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர வேண்டும் என்று மாமனார்,மாமியார் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சித்திரவதை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த நந்தினி கடந்த 9ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து அவரை புதுச்சேரி உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அவரது கணவரை போலீசார் கைது கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.