பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் பேரையூர் கிராமம் வடக்கு தெருவில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுநரான இவருக்கு சரிதா ( 19 ) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சரிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த மூன்றாம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சரிதா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் யாரும் இல்லாத சூழ்நிலையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் சரிதா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சரிதாவின் தாய் பாப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரிதாவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரிதாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரிதாவுக்கு திருமணமாகி ஒரு வருடங்களே ஆவதால் உதவி ஆட்சியர் பத்மஜா இந்த தற்கொலை குறித்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்