மதுரை திருமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுக, 1 வார்டில் காங்கிரஸ், 1 வார்டில் தேமுதிக என்று வெற்றி பெற்றிருந்தனர். கடந்த 4ம் தேதி இங்கு அரசு அறிவித்தபடி தேர்தல் நடந்தது. இந்நிலையில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் வருகை புரியாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அதாவது தேர்தல் அலுவலர் அனிதா தலைமையில் நடைபெற்ற இத்தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் 19 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா ஒருவரும் பங்கேற்றனர்.
அப்போது திமுக சார்பாக ரம்யா முத்துக்குமார், அதிமுக சார்பில் உமா விஜயன் போன்றோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் ரம்யா முத்துக்குமார் 15 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட உமா விஜயன் 6 வாக்குகள் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 6 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக திமுக உறுப்பினர்கள் 19 பேர் இருந்த சூழலில், 15 வாக்குகளைப் பெற்ற நிலையில் திமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர். இதில் ஒருசிலர் நகராட்சியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து உடனே அங்கு வந்த போலீசார் திமுகவினரை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் திருமங்கலம் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.