திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்ததை தொடர்ந்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின் சத்தம் வந்த பெட்டி அருகே சென்று பார்த்த பொழுது பட்டிக்கட்டுகள் உடைந்து ஸ்லீப்பர் கட்டைகளும் சேதமாகி இருந்தது. மேலும் தண்டவாளத்தில் இருந்த இரும்பு துண்டுகளும் ஆங்காங்கே நொறுங்கி கிடந்தது.
இதையடுத்து என்ஜின் டிரைவர் இது பற்றி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் விசாரணை செய்தனர். ரயில் தண்டவாணத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்து இருக்கலாம் என தெரிய வருகின்றது. பின் போலீசார் ரயில் தண்டவாளத்தை சோதனை இட்ட பின் அரை மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டது. தற்பொழுது ரயில்வே போலீஸ் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.