திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பேருந்து சேவை திருப்தியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருக்கின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றார்கள். ஆண்டு முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும் பண்டிகை காலங்களில் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். பண்டிகை காலங்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்து போக்குவரத்தையே நம்பி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் கடலூர், நெல்லை, திருச்செந்தூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கும்பகோணம், திருவண்ணாமலை. திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு தொலைதூரப் பேருந்துகளை நம்பியே இருக்கின்றார்கள்.
இதில் நாள் ஒன்றுக்கு 35 பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் விடுமுறை நாட்களாக இருக்கும் போது பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. அப்போது தென் மாவட்டம் உள்ளிட்ட தொலைதூரப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் பயணிகள் சிரமம் அடைகின்றார்கள். மேலும் இரவு 11 மணிக்கு மேல் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. அரசு பேருந்துகளை நம்பித்தான் ஏழை எளிய மக்கள் இருக்கின்றார்கள்.
அதற்கு காரணம் அரசு பேருந்துகளில் பயண கட்டணம் குறைவு. ஆனால் அரசு பேருந்துகளின் பராமரிப்பு மோசமாக இருக்கின்றது. இருக்கைகள் உடைந்து, ஜன்னல் கண்ணாடி சேதமடைந்து இருக்கின்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். இது மட்டுமல்லாமல் அரசு பேருந்துகள் வேகம் குறைவாகவே இயக்கப்படுகின்றது. இடையில் உணவகங்களில் நிறுத்தி அதன் பிறகு எடுக்கின்றார்கள். அவ்வாறு நிறுத்தும் இடங்களில் கழிப்பிட வசதி கூட சரிவர இல்லை என பயணிகள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றார்கள். ஆகையால் அரசு பேருந்துகளின் சேவை திருப்தியாக இல்லை என்பதே பயணிகளின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.