திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது. இந்த நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவில் நாலு மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற இருக்கின்றது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான முடிவு செய்திருக்கின்றது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கருட சேவை அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவிதிகளில் உலா வருவதால் கூடுதலாக பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 300 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் பிரம்மோற்சவ விழாவில் சிரமம் இல்லாமல் கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக 40 பேருந்துகளை இயக்க முடிவு செய்து இருக்கின்றது. அதன்படி திருப்பதி, திருமலை, சித்தூர், காளஹஸ்தி, புத்தூர் கூடூர், வெங்கடகிரி போன்ற அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 340 பேருந்துகள் புதிதாக பெயிண்ட் அடித்து என்ஜின்களில் பழுது நீக்கி புதுப்பிக்கும் பணியை தொடங்கி இருக்கின்றது.