திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 8-ஆம் தேதி(நாளை) முதல் 10-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கவிருக்கிறது. ஆண்டு முழுவதும் நடைபெறும் அர்ச்சனை மற்றும் திருவிழாவின் போது கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகள் செய்கின்றனர். அதனால் ஏற்படும் தோஷத்தால் கோவிலின் புனிதம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை 3 நாட்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை அடுத்து மாலை நேரத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.
8-ஆம் தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ஆம் தேதி பவித்ரா சமர்ப்பணம், 10-ஆம் தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. முன்னதாக இன்று அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. எனவே 9-ஆம் தேதி அஷ்டதள பாத பத்மாராதன பத்மாராதன சேவை, 8-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதி வரை ஊஞ்சல் சேவை, கல்யாணம் உற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.