திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்வதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையும் மூடப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை நேற்று திறக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் கவுண்டர்களை பெற்ற தரிசனம் டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மலைப்பாதை வழியாக காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செல்லலாம். அதனால் பக்தர்கள் இரவு நேரத்திற்குள் மலையில் இருந்து கீழே இறங்கி விடலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மலைப்பாதையில் போதிய விளக்குகள் வசதி அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பக்தர்களுக்கான சுகாதார வசதிகள் முழுமையாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.