ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சம்பவத்தன்று இரவு முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை காவல்துறையினர் விசாரித்து முயன்றபோது அவர்கள் தப்பித்து ஓடி விட்டார்கள்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பி ஓடிய நபரை அடையாளம் கண்டுபிடித்து மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சூலூரில் வசித்த 36 வயதுடைய மருதாச்சலம் என்பதும், அவர் அதே பகுதியில் வசித்த 37 வயதுடைய சதீஷ்குமாரும் ஒன்று சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை எடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்களின் நண்பர்களான கோவை கோவில்பாளையத்தில் வசித்த 51 வயதுடைய நடராஜ் என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 26 பவுன் தங்க நகைகள், 1,03,000 பணம் மற்றும் பைக் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் அவர்கள் 3 பேரும் மீது 9 திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. நகை திருட்டு வழக்கில் மூன்று பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் சந்துரு, முத்துகருப்பன், செல்லபாண்டியன், பழனிகுமார் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டி உள்ளார்.