தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 21ஆம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பீரோவில் இருந்த 9¾ பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் கணேசபுரத்தை சேர்ந்த பெயிண்டர்களான பிரவீன் பாண்டியன்(21), ராமபுதுரை சேர்ந்த சரவணன்(25), எட்டயாம்பட்டியை சேர்ந்த தேவரூபன்(34), அரவிந்த்குமார்(19) ஆகியோர் சேர்ந்து திட்டம் போட்டு ரமேஷ்குமார் வீட்டில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் இதேபோல் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரவீன் பாண்டியன், சரவணன் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சூப்பிரண்டு அதிகாரி சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.