மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் பூ வியாபாரியான இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து இளங்கோவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் திருடிய மோட்டார் சைக்கிளை இளங்கோவனின் வீட்டிற்கு முன்பு மீண்டும் விடுவதற்காக 2 பேர் அங்கு சென்றுள்ளனர்.
அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான சூரியபிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தங்களது தேவைக்காக மோட்டார் சைக்கிளை திருடியதாகவும், தேவை முடிந்த பிறகு அதனை திருடிய இடத்திலேயே விடுவதற்கு வந்த போது மாட்டி கொண்டதாகவும் சூரிய பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதன்பின் சூரிய பிரகாஷபிரகாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய அமர் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.