திருச்சி மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
திருச்சியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 44 பஸ்கள் நிறுத்தும்படி பேருந்து நிலையம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 10,000 பயணிகள் வரை வந்து செல்லலாம். அதன் பிறகு 30 ஏக்கர் பரப்பளவில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்காக டெர்மினல் அமைக்கப்படும். அதன் பிறகு 28 ஏக்கர் பரப்பளவில் மார்க்கெட் அமைக்கப்படும். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 390 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இதனையடுத்து பஞ்சப்பூரில் சாலைகள் அமைப்பதற்கான நிலங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி விட்டனர் என்றும், சாலைகள் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பிறகு மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் நிலையில் பெரிய மால் மற்றும் வணிக நிறுவனம் ஒன்றும் கட்டப்பட இருக்கிறது. திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணியானது தாமதமாக நடந்து வருவதால் அதை விரைந்து முடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி முழுவதுமாக பெரிய மற்றும் சிறிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், டெண்டர் முடிவடைந்து 3 மாதங்களுக்குள் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும் கூறினார். மேலும் பெருங்குளத்தூரில் குப்பை கிடங்கை அகற்றிவிட்டு 400 ஏக்கர் பரப்பளவில் பெரிய பூங்கா ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து மரக்கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பது, காய்கறி கழிவில் இருந்து கேஸ் எடுப்பது போன்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் மற்ற மாநகராட்சிகளுக்கும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.