தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டை மூட உத்தரவிடப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து வியாபாரிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கு 900 மொத்த விற்பனைக் கடைகளும் 1500 தரை கடைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வியாபாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கட்டாயம் மார்க்கெட் மூடப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.