தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரேயுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.
கழகத்தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன் பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி அக்டோபர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது. கடைக்கோடி மனிதர்கள் மற்றும் கடைசி குக்கிராமத்திற்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்று சேரவேண்டும் எனும் சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது.
ஆனால் இதற்கு எப்படியாவது ஊறுவிளைவித்திட வேண்டும் என்று நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும். அமைச்சர் பெரு மக்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் முன்பே செப்டம்பர் 26ஆம் தேதி ஓர் அறிக்கை மூலம் அன்புக் கட்டளை விடுத்திருக்கிறேன். அதை மீண்டுமாக நினைவூட்டுகிறேன். அதாவது எந்த காரணம் கொண்டும் சொல்லிலும்,செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாள வேண்டும்.
நம்மிடம் இருந்து வெளிப்படும் சொற்கள், அதை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடிவரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்துவிடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களை விட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித்தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும். நம் தரப்பில்இருந்து தவறுகள் மற்றும் குறைகளுக்கு குன்றிமணி அளவு கூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள சிறிதும் தயங்கமாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்” என்று கூறினார்.