தனியார் வங்கியில் சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் தீவு அமைந்துள்ளது. இங்குள்ள சானிச் நகரத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வழக்கம் போல் காலை நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வங்கியை சுற்றி வளைத்தனர். இந்நிலையில் திடீரென போலீசாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அந்த துப்பாக்கி சூட்டில் 2 மர்ம நபர்களும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து 6 காவல்துறை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் வந்த காரை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருப்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு வங்கியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.