Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மீனவர்… கடற்கரையில் உறவினர்கள் கதறல்… நாகையில் சோக சம்பவம்..!!

நாகையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால் அவருடைய கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லார் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவிச்செல்வன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 28-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அதே பகுதியில் வசித்து வரும் மணிவண்ணன், அமிர்தலிங்கம் ஆகிய இரண்டு பேருடனும் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

அவர்கள் 3 பேரும் சுமார் 2 நாட்டிக்கல் தொலைவில் சென்ற போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கவிச்செல்வன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். அப்போது சிறிது தூரம் சென்ற பிறகு அவருடன் வந்த சக மீனவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்த போது படகில் அமர்ந்திருந்த கவிச்செல்வனை காணவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் நீண்ட நேரமாக அவரை கடலில் தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கல்லார் மீனவ கிராம மக்களிடம் கரைப் பகுதிக்கு வந்து அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீட்பு கவசங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமான மீனவர் கவிச்செல்வனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து கடலோர காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மீனவரின் கதி என்னவென்று தெரியாமல் அவருடைய உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Categories

Tech |