மினி பேருந்தை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி ராமமூர்த்தி நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி பேருந்து வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயராமன் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பாலசுப்ரமணியன் என்பவரிடமிருந்து ஒரு மினி பேருந்தை வாங்கி அதனை பழுது பார்ப்பதற்காக வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ மினி பேருந்தை திருடி சென்றனர். இதுகுறித்து ஜெயராமன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மினி பேருந்து கும்பகோணம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி பேருந்தை பத்திரமாக மீட்டனர். மேலும் மினி பேருந்தை திருடிய குற்றத்திற்காக ஆனந்தராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பாலு, சுப்பிரமணியன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.