14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழபட்டமங்கலம் தெற்கு தெருவில் கூலித் தொழிலாளியான சந்திரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு ஊரில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சந்திரமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.