கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் ரூ.1,13,00,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ரூ.1,13,00,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சி காலத்தில் எம்எல்ஏக்கள் மாநகராட்சி அளவில் தந்த டெண்டர் விவரங்கள் தெளிவாக இல்லை என்றும் அதில் எனக்கு முரண்பாடுகள் அதிகமாக உள்ளது. எனவே இந்த தவறுகளை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கடந்த ஆட்சியின் பொழுது பல பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கு நிதி ஆதாரம் இல்லை என்பதை காரணமாக கூறப்படுகிறது. இதனால் டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர்கள் பணிகளை விட்டுச் சென்று விட்டனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் ரூ.100 கோடி மதிப்பில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளை சீர் அமைக்க நிதி அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு ரூ.20 கோடி நிதி அளித்திருக்கிறார். மலைவாழ் மக்களின் அன்றாடத் தேவைகளான மின்சாரம் மற்றும் சாலை வசதி ஆகியவற்றை விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயனாளர் அட்டைகள் பெறுவதில் சிரமப்படுகின்றனர் என்பதால் வீடு வாரியாக சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்