மளிகை கடையில் பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் துரை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்து ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த துரை கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த 1800 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. அந்த நபர் தன்னுடைய கைபேசி மற்றும் காலணிகளை கடையில் விட்டு விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து துரை தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் திருடிய குற்றத்திற்காக செல்வின் ராஜசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.