அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியானது புனேவில் புறநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 1419 பேர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஊழியர் சங்கம் வழக்கு தொடரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து ஊழியர்களுக்கும், ஊழியர் சங்கத்துக்கும் அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், வேலை இழந்தவர்களுக்கு தொழில்துறை விவகார சட்டமான 1947 பிரிவு 25 சி கீழ் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.