திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம் மற்றும் வளர்மதி தம்பதியினர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ மாயக்கார மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வந்தனர். அந்தக் கோவிலுக்கு அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை மற்றும் அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரம்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.
அதனைப்போலவே மாதம் தோறும் சிறப்பு தினங்களில் மதிய அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த கோவில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில் கொரோனா மாரியம்மன் என்ற பெயரில் சிலை வைத்து வணங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி தனியாக கொரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா மாரியம்மனை பல பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றால் கொரோனா உறுதியாக வராது என்று கோவில் பூசாரி கூறுகிறார்.
அதனால் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அங்குள்ள கொரோனா மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று பரவாது என்று கோவில் பூசாரி உறுதி அளித்து கூறுவது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் நாளுக்கு நாள் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.