கொரோனா பரவலை அடுத்து இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவலை அடுத்து இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதி இல்லை என்றும், பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை என உத்தரவு விட்டுள்ள தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் சென்று வழிபட அனுமதி இல்லை என்றும், தினமும் நடைபெறும் வழிபாடுகளை ஊழியர்களை கொண்டு நடத்த தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில்களில் ஏற்கனவே குடமுழுக்கு நடத்த அனுமதி பெற்றிருந்தால் பொதுமக்கள் இன்றி திருவிழாக்களை நடத்தலாம் என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு புதிதாக எந்த திருவிழாவிற்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஐடி துறைகளில் 50% பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும் என்றும், புதுச்சேரி நீங்களாக பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் இ- பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் அனுமதி தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிகள் அமர்ந்துகொண்டு மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.