காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த 23 வயதுடைய முத்துசெல்வி என்பவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய தீபக்கும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் தங்களுடைய வீட்டுக்கு தெரியாமல் திருமணமும் செய்து கொண்டனர்.. பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சிலதினங்களாக காதலன் தீபக், காதலி முத்துசெல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்ததுடன், அவரை ஏற்கவும் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து போன முத்து செல்வி உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.. அதேபோல மடத்துக்குளம் காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.. அதனைத்தொடர்ந்து நேற்று முத்துசெல்வி மற்றும் தீபக் இருவரது பெற்றோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தனர்.
திருப்பூர் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா தலைமையில் முத்துசெல்வி – தீபக் இருவருக்கும் கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது முத்துசெல்வியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று தீபக் கூறியதாக தெரிகின்றது. இதனால் மனமுடைந்த முத்துச்செல்வி ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கழிவறைக்கு சென்று நேற்று மதியம் விஷம் குடித்தார். இதையறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தனர்.
பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து முத்துசெல்வியை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தன்னுடைய மகளை தீபக் ஏமாற்றிவிட்டதாக கூறி முத்துசெல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் தரையில் நீண்ட நேரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தசம்பவம் பற்றி அறிந்ததும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது என்பவர் வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா கூறியதாவது, தீபக் தன்னை காதலித்து பின்னர் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டதாகவும், இருவரையும் சேர்த்து வையுங்கள் என்றும் முத்துசெல்வி கூறினார். ஆனால் தீபக் இதற்கு மறுப்பு தெரிவித்து அவருடன் சேர்ந்து வாழ என்னால் முடியாது என்று கூறினார். புகார் அளித்தால் காவல்துறையினர் மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு விரும்பாத முத்து செல்வி அப்படியெல்லாம் வேண்டாம் என்றும், இருவரும் சேர்ந்து வாழ வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.. தீபக் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந்த முத்துசெல்வி விஷம் குடித்து விட்டார். ஏற்கனவே மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. தற்போது கவுன்சிலிங் பெறுவதற்கு இருவரும் இங்கு வந்தனர் என்றார்.