நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் நீட் தேர்வு எழுதும் திருமணமானவர்கள் தாலி, மெட்டி மற்றும் மூக்குத்தி போன்றவற்றை புனிதமாக கருதும் நிலையில் அதை கட்டாயமாக அகற்றும்படி கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவிகள் தேர்வு எழுதும் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிக்க ஆசிரியர்கள் இருக்கும் நிலையில் அவர்களை ஆபரணங்களை கழற்ற சொல்வது சட்டவிரோதமானது. எனவே அவர்களை ஆபரணங்களை கழற்றும்படி நிர்பந்திக்க கூடாது. மேலும் இந்த நிபந்தனையை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுரேந்தர் இந்த மனுவுக்கு இன்னும் நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தேசிய தேர்வு மையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.