லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கூலித் தொழிலாளர்களான தேவராஜ், ஹரி, தினேஷ், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. மேலும் அங்கிருந்த வணிக நிறுவன கடை சுவரில் மோதி லாரி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.