கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராஜா மற்றும் தினேஷ் ஆகியோருடன் காரில் தேனியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருக்கும் மெடிக்கலில் மருந்துகளை விநியோகம் செய்ய சென்றுள்ளார். இவர்களின் கார் கோபாலபுரம் அருகில் இருக்கும் பார்வதி ஓடை பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.