தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தூங்கணாம்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான தனபால் என்பவருடன் ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சூர்யா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பலமாக மோதியது.
மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் மறுபக்கம் பாய்ந்து அடுத்தடுத்து 5 மோட்டார் சைக்கிள்கள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி, வீரப்பன், உலகநாதன், நிவேதா ஆகியோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதில் மூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.