தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவரை மூன்று நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. எடப்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த குண்டாரிநன்னேபா என்பவரின் மகன் கலீல்(42). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தாரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய கலீல் ஊரடங்கு காரணமாக மீண்டும் கத்தாருக்கு செல்லாமல் தனது சொந்த ஊரிலேயே விவசாயம் செய்துகொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு நிலப் பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கலீல் தனது தாய் ஷகினாபீயுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டு வரும் வழியில் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 3 வாலிபர்கள் கலீலிடம் உங்கள் தாயின் சேலை மோட்டார் சைக்கிளிலின் சக்கரத்தில் சிக்கி உள்ளது என்று கூற மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார் கலீல்.
அந்த சமயத்தில் அரிவாள் , கத்தி போன்ற ஆயுதங்களால் அந்த 3 நபர்களும் கலீலை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கலீலை பார்த்த அவரது தாயார் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுதார். அவரின் கதறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து கலீலை சிகிச்சைக்காக திருக்கோவிலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கலீலை பரிசோதித்த மருத்துவர் கலீல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கலீ்லுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கலீல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.