தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பி.கே சேகர்பாபு உள்ளார். இவர் அறிமுகம் செய்த திட்டம்தான் பயன்படுத்தாத கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம். இந்த திட்டத்தில் தங்க பிஸ்கட்டுகளை வங்கிகளில் சேமிப்பு திட்டத்தின் கீழ் வைப்பதன் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை வைத்து கோவில் நலத்திட்டங்களை செய்து கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை உருக்குவது என்பது அவர்களுடைய நம்பிக்கையை புண்படுத்துவதற்கு சமம் என்று ஏராளமானோர் குற்றசாட்டுகளை வைக்கின்றனர். இதனையடுத்து அதிமுகவின் சார்பாக கூறுகையில்,கோவில்களை குறிவைத்து திமுக ஆட்சியானது மோசடி செய்து வருகின்றனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வழங்கப்படும் காணிக்கை நகைகளில் வைரம், பவளம், முத்து போன்ற நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் அவற்றை என்ன செய்யப்போகிறார்கள்? எப்படி அதை கணக்கு காட்டுவார்கள்? எவ்வளவு சேதாரம் ஆனது? எவ்வளவு கழிவுகள் போனது? எவ்வளவு ஆகியுள்ளது? எவ்வளவு மீதி ஆகியுள்ளது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திமுக ஆட்சி தரும் உண்மைத்தன்மை எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கும் என்று பல தரப்பினர் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களின் நகைகளை வைத்து திரட்டப்படும் நிதி ஆதாரங்கள் எந்த அடிப்படையில் செலவு செய்யப்படும்?அவை பொது நிதிக்கு போய் சேருமா ? இந்து சமய வளர்ச்சிக்காக, கோவில்களில் திருப்பணிகள், சொத்துக்கள் பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவு செய்யுமா? இது குறித்து பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. இதையடுத்து அதிமுக தரப்பில் ஏற்கனவே தவறான கணக்கை காட்டும் கட்சிதானே திமுக என்று விமர்சித்து வருகின்றனர்.
அவை என்னவென்றால் கணக்கில் பிழை ஏற்பட்டதால்தான் திமுக உடைந்து அதிமுக பிறந்தது என்பது வரலாறாகும். அதனடிப்படையில் தற்போது நகைகளை உருக்கி பிஸ்கட் ஆக்கும் தங்கத்திற்கு என்ன கணக்கு காட்ட போகிறார்கள் என்று ஆதிமுக பல கேள்விகளை வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சி எப்படி கையாளப் போகிறது? மற்றும் எவ்வாறு கணக்குக் காட்டப் போகிறார்கள்? போன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.