திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆசிரியர்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் உடனடியாக சம்பள நிலவைத் தொகையை வழங்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.