சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவகிரி டவுன் தெருவில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான நாசீர் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாசீருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நாசீர் அதே பகுதியில் வசிக்கும் சாதிக்பாட்சா என்பவருடன் சரக்கு ஆட்டோவில் கொத்தமல்லிக்கீரை ஏற்றிக்கொண்டு சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு நாசீரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான பிரபு என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.