சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து 5ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. அதேசமயம் சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு அந்த அணியில் தீபக் சஹார் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். விரைவாக காயம் குணமடைந்து வருவதால் ஏப்ரல் இறுதியில் தீபக் சஹார் அணியில் இணைந்துவிடுவார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த 4 மாதங்கள் வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இந்த சீசனுக்கு மட்டும் சிஎஸ்கே தற்காலிகமாக மாற்று பௌலர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் இஷாந்த் ஷர்மாவை, தீபக் சஹாருக்கு மாற்றாக தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இஷாந்த் ஷர்மாவை தேர்வு செய்ய சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது தற்போது போட்டி நடந்து வரும் மும்பை, புனே மைதானங்களில் டெஸ்ட் பௌலர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர். அவர்களது டெஸ்ட் மேட்ச் லெந்த் பால்கள் தான் இதற்கு முக்கிய காரணம். டெஸ்ட் மேட்ச் லெந்த் பால்கள் தான் மும்பை, புனே மைதானங்களில் அபாயகரமானதாக உள்ளது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.
எனவே சிஎஸ்கே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்ற இஷாந்த் ஷர்மாவை வாங்க திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இது நடந்தால் பவர் பிளேவில் சிஎஸ்கேவால் ரன்களை கட்டுப்படுத்த முடியும். மேலும் இஷாந்த் ஷர்மாவால் டெத் ஓவர்களின் போதும் டெஸ்ட் மேட்ச் லெந்த்களில் பந்துவீசி நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதோடு மட்டுமில்லாமல் அவர் உயரமாகவும் இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு டெஸ்ட் மேட்ச் லெந்த் பால்களை எதிர்கொள்வது நிச்சயம் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் தான் சிஎஸ்கே நிர்வாகம் இஷாந்த் ஷர்மாவை தேர்வு செய்ய முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.