மது வாங்கி தருமாறு தகராறு செய்த மைத்துனரை தாக்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வசந்த நகர் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரவிக்குமார் சம்பவத்தன்று ரோஸ்நகரில் உள்ள அவரது அக்கா ரேவதி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருப்பவர்களுக்கும் ரவிக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரேவதியின் கணவர் சரவணன் ரவிக்குமாரை சமாதானப்படுத்தி வெளியே சாப்பிடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ரவிக்குமார் மது வாங்கி தருமாறு சரவணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சரவணன் அருகில் இருந்த செங்கலை எடுத்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி ரவிகுமாரை தாக்கிய சரவணனை கைது செய்து திருமங்கலம் சிறையில் அடைத்துள்ளனர்.