சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த நித்திஷ் தனது தம்பியை காப்பாற்ற ஏரியில் இறங்கியுள்ளான்.
ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் சிறுவர்களை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.