தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி நேற்று 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக வருகின்ற 17ஆம் தேதி போராட்டம் வெடிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் தங்களின் வீட்டு வாசலிலும், வாய்ப்புள்ள இடங்களிலும் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் கூடி மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கருப்புக் கொடிகளையும் ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்துவர் என்று அறிவித்துள்ளார்.