தமிழகத்தில் ‘மினரல் வாட்டர்’ பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மினரல் பாட்டில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வணிக நோக்கத்தில் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகின்றன. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட மற்ற மாவட்டங்களிலும் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல இடங்களில் விதிகளுக்கு புறம்பாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக அரசுக்கு புகார்கள் சென்றன. சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை புழலை சேர்ந்த சிவமுத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் எடுக்கும் தொழிலில் ஆயிரத்து 650 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 460 ஆலைகள் இயங்கி வருகின்றன.
ஆனால், அதில் 80 விழுக்காடு ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து , வருகின்ற 3ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு விரைவாக உருவாக்க வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை நம்பியுள்ள ஓட்டல், டீ கடைகள் பாதிக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் குடிநீர் கேன், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையிலும் குடிநீர் கேன் விற்பனை பாதிப்பால், அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் எங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறை வகுத்து அதற்கு கட்டணம் நிர்ணயித்தால் கூட அதனைத் தொடரத் தயாராக இருப்பதாக குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.