தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றிருந்தால், இந்த கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், கடன் பெற்றதில் பெரிய அளவிலான முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு தெரியவந்தது.
எனவே தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் இந்த கடனை தள்ளுபடி செய்யலாம் என அறிவித்திருந்தது. இதை அடுத்து தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலானது எடுக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கான நகை எப்போது கைக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இத்திட்டமானது தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், நகைக் கடனை தள்ளுபடி செய்வதும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி செய்த விவசாயிகளுக்கு, நகை கடன் தள்ளுபடி கிடையாது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து திமுக அரசானது தேர்தல் வாக்குறுதியில் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் புதிய நிபந்தனை வைத்தனர்.
அதன்படி சுமார் 35 லட்சத்து 30 ஆயிரம் நபர்கள் நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதி பெறவில்லை என்றும் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ளவர்கள் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ஆகிய நிறுவனங்களில் நகைக்கடன் தள்ளுபடி திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மொத்த எடையில் 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்று அரசாணைப்படி தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்கள் 47,567 பேர் உள்ளனர் எனவும் அவர்களுக்கு 199.52 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தொகையானது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த பயனாளிகளுக்கு, நகைக்கடன் தள்ளுபடி சான்றும், நகையும் வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.