குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்து 9 மாதங்கள் ஆகின்றது. ஆனால் இந்த திட்டம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் குடும்ப தலைவிகளுக்கு எப்போது உரிமை தொகை வழங்கப்படும் என்ற குரல் ஓங்கி ஒலித்துள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தற்போது 21 மாநகராட்சிகளிலும் திமுக கொடி பறக்கிறது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கொங்கு மண்டலத்தையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உறைந்துள்ளனர்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பரிசாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என தகவல்கள்வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.