லடாக் எல்லையில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லடாக் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி வாகன விபத்தில் உயிரிழந்ததை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பாக மரியாதை செலுத்தவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அது மட்டுமன்றி அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.