தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் 6 ராஜ்யசபா எம்பி தேர்தலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளதால், தேர்தலில் வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, தேர்தலை நடத்துவது உள்ளிட்டவற்றுக்காக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது திமுக, அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருப்பதால் இரண்டு கட்சிகளும் தலா 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி தலா 3 எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. நிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி என்றும், தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.