தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்களில் பலர் இப்போரில் சிக்கி தவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம் படிக்க தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்வதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 6-வது நாளாக நீடித்து வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டில் உள்ளவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு செல்கின்றன. அதேபோல் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களும் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் வேலை மற்றும் படிப்புக்காக பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தியாவிலிருந்து உக்ரைனில் வசித்து வந்த நிலையில், திடீரென எழுந்த போரின் காரணமாக இவர்களில் பலரால் உக்ரைனை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் மத்திய அரசு, இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களை அங்கிருந்து மீட்டு வந்துள்ளது.
ஆனால் அவர்கள் மருத்துவம் படிக்க சென்றுள்ளதாக தகவல் அதிகம் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த எண்ணிக்கையில் சற்று அதிகமாக உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்றால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8000 எம்பிபிஎஸ் மற்றும் 3000 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.
ஆனால் இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாத சூழலில் சிலர் பொறியியல், வணிகம் உள்ளிட்ட பிறர் துறைகளுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் மருத்துவ படிப்பு மட்டுமே படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கும் மாணவர்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது படிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு ஆகும் செலவானது ரூ.1 கோடி என்ற நிலையில், வெளிநாடுகளில் இதை விட குறைந்த செலவே ஆகிறதாம்.
இதனால்தான் உக்ரைன், ரஷ்யா, ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொள்கின்றனர். அது தவிர இப்போது இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்படுவதும் ஒரு காரணமாகும். இந்த காரணங்களினால் இந்தியாவிலிருந்தும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் இப்போது இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு இல்லை என்றால் அனைவரும் மருத்துவம் படிக்க முடியும் என்ற கோரிக்கையை மக்கள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.