Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே…! உங்களுக்கு ஏதும் தீமையா ? என்னை தாண்டி தான் வரணும்… சீமான் ஆவேசம்

மானாமதுரை தொகுதியின் திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்பிறையில் பேசிய சீமான், அன்பு மிக்க மக்கள், மதிப்புமிக்க நம் உரிமைகளை சில ரொட்டித் துண்டுகளுக்காகவா விற்பது என்பது அவமான கரமானது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஓட்டுக்கு காசு கொடுக்கிறவன் பாவி, அந்த காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறவனை தேசதுரோகி என்கிறார் தெய்வத் திருமகன் . நமது ஐயா முத்துராமலிங்கத் தேவர்.

பேரறிஞ்சர் அறிஞர் அண்ணா என்னும் பெருந்தகை, தங்கத்தை யாராவது தவுட்டிற்கு விற்பார்களா என்று சொல்கிறார். ஆனால் அவரை பேரைச்சொல்லி நீண்ட காலமாக அரசியல் செய்து வருகிற இவர்கள் தான் தங்கத்தை தவிட்டுக்கு வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என் அன்பிற்குரிய சொந்தங்கள், என் அருமை மக்கள், ஜனநாயகத்தில் மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் ஒன்றுதான் மாறுதலுக்கான வழி, வாக்கு ஒன்றுதான் வலிமைமிக்க ஆயுதம். அதை அநீதிக்கு எதிராக ஏந்துவோம்  என்று தான் உங்கள் மகன் அன்போடு அழைக்கிறேன்.

என் அன்பு தம்பி, தங்கைகளிடம் கெஞ்சி கேட்பது அதுதான். படித்த நீங்கள், மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனதில் புரட்சி வரவேண்டும் என்கிறார்கள். ஒரு நல்ல கருத்தை விதைத்து விட்டால், தவறான அரசாங்கம் உருவாகாது. அப்படி உருவானாலும் அது நிலைக்காது என்கிறார் மு. வரதராசனார். அந்த அடிப்படையில் தான் தொடர்ச்சியாக உங்கள் பிள்ளைகள் ஒரு கருத்தியல் புரட்சியின் மூலம் ஒரு மாறுதலுக்கான அரசியலை இந்த மண்ணிலே விதைத்து வருகிறோம்.

நான் விதைத்த விதை பத்து ஆண்டுகளில் எவ்வளவு முளைத்து இருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள். இன்னமும் கிளர்ச்சியாக மேலெழுந்து ஒரு தலைமுறை பிள்ளைகள் வருவார்கள். உலக அரசியலை படிக்கிறார்கள்,  எங்கள் வரலாறு, எங்கள் இனத்தின் வரலாற்றை படிக்கிறார்கள், உலக வரலாற்றை படிக்கிறார்கள்,  உலகத்தின் புரட்சியாளர்கள் மர்கசில் இருந்து… லெனினில் இருந்து…. ஸ்டாலினின் இருந்து…. ஏங்கல்ஸிலிருந்து… பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா எல்லாவற்றையும் படிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் நேசித்து, சுவாசித்துக் கொண்டு இருக்கின்ற ஒரு தலைமுறை புரட்சியாளர்கள் நாங்கள் தயாராகி  வீதிக்கு வந்து விட்டோம். திமுகவை விட்டால் அதிமுக தான். அதிமுகவை விட்டால் திமுக தான். இரண்டை விட்டால் உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம். நாம் தமிழர் என்று…  எங்களுக்கு வாக்கு செலுத்தி வலிமை அடைய செய்யுங்கள்.புதிதாக அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒன்றும் செய்ய போறது இல்லையே.

நேற்று கட்சி ஆரம்பித்து இன்னைக்கு ஆட்சிக்கு பிடிக்கவில்லையே. 70ஆண்டு கால கட்சி ஒன்று, 50 ஆண்டுகால கட்சி ஒன்று. உங்கள் பிள்ளைகள் செய்வது தான் வரலாற்றில் பெரிய புரட்சி. நாங்கள் வாரிசு இல்ல…. அப்பா வருவார், அவர் இருப்பார், அப்பறம் மகன் வருவார், அப்பறம் அவர் வருவாரு….  யாரோ ஆரம்பித்த கட்சியில்  நாங்கள் வந்து அதில் தலைமை ஏற்று நிற்கவில்லை. இது நாங்கள் உருவாக்கிய லட்சிய புரட்சி இது. ஒரு எளிய மகன் எந்த பின்புலமும் இல்லாமல்… நாங்களே உருவாக்கிய தமிழ் மக்களுக்கான அரசியல் பெரும்படை.

இன்றைக்கு என் இன மக்களுக்கு என்று ஒரு பெரும்படை இருக்கிறது  அதுதான் நாம் தமிழர் என்ற பெரும்படை. என் மக்களின் உரிமை பறி போகணுமா ? என் மக்களுக்கு ஒரு தீமை வரணுமா ? என்றால் எங்களை தாண்டித்தான் வரவேண்டும். அதனால் என் அன்பு சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள்  இந்த தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடுகின்ற அன்பு தங்கை சண்முக பிரியாவிற்கு விவசாய சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் என சீமான் வாக்கு சேகரித்தார்.

Categories

Tech |