தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தளர்வுகள் வந்ததனால் தொற்றே இல்லை என கருதக் கூடாது. 2 ஆம் அலை முடிந்துவிட்டதாக கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கோவிட் சார்ந்த வழிமுறைகளை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. மேலும் முதல்வர் அனைத்து துறைகளும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.